தொழிற்சாலைகளில் வளங்களை திறமையாகப் பயன்படுத்துவதுடன், கழிவுகளைக் குறைத்து மறுசுழற்சியை அதிகரிப்பது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை இந்தியத் தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) கிரீன்கோ கவுன்சில் வெளியிட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற 17-வது சிஐஐ கிரீன்கோ கழிவு மற்றும் வள மேலாண்மை உச்சி மாநாட்டில், ‘சிஐஐ கிரீன்கோ மறுசுழற்சி வழிகாட்டுதல்கள் – முன்னோடி பதிப்பு’ வெளியிடப்பட்டது. மேலும், இந்த மாநாட்டில் கழிவுகளிலிருந்து வளங்களை மீட்டெடுத்தல், மின்னணுக் கழிவுகள் மற்றும் பேட்டரிகளை மறுசுழற்சி செய்தல், உயிர்வாயு உற்பத்தி, கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரித்தல் ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், ஏஐ, தானியங்கி தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு மூலம் கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மூலப்பொருட்கள், நுகர்பொருட்கள், பேக்கேஜிங் உள்ளிட்ட வளங்களின் பயன்பாட்டை மதிப்பிடுவதற்கான குறியீடுகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம், நிறுவனங்கள் வளங்கள் விரயமாவதை குறைத்து, மறுபயன்பாட்டை அதிகரித்து, உற்பத்தித் திறனை மேம்படுத்த முடியும். தொழிற்சாலைகளின் செயல்பாடுகளை அளவிடவும், முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் இந்தக் கட்டமைப்பு உதவும். மேலும், தொழிற்சாலைகளில் வழிகாட்டுதல்களைச் சோதனை செய்து, நிறுவனங்களின் கருத்துகளின் அடிப்படையில் மேம்படுத்தவும் சிஐஐ திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து கோவா முதல்வரின் சிறப்பு ஆலோசகரும், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் விஞ்ஞானியுமான பத்மஸ்ரீ டாக்டர் சரத் காலே பேசுகையில், "கழிவுகள் உருவாகும் நிலையிலேயே அவற்றைக் குறைப்பதும், வளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துவதும் தனிநபர்கள் மற்றும் தொழிற்துறையினரின் கூட்டுப் பொறுப்பு" என்றார்.
சிஐஐ கிரீன் பிசினஸ் சென்டர் செயல் இயக்குநர் வெங்கடகிரி கூறுகையில், புதிய வழிகாட்டுதல்கள் தொழிற்சாலைகளில் மறுசுழற்சி நடைமுறைகளை ஒருங்கிணைக்க உதவும் என கூறிய அவர்,, முன்னோடித் திட்டத்தில் பங்கேற்று கருத்துகளைப் பகிருமாறு உற்பத்தி மற்றும் செயல்முறைத் தொழில் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்தார்.